ADSENSE HERE!
கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து விலக்கு அளித்து, புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும், தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
மொழிப் பாடம்: பள்ளிகளில் கட்டாயமாக தமிழ் பயிலும் சட்டத்தை, 2006ல், தமிழக அரசு கொண்டு வந்தது. அதன்படி, தமிழ்நாடு இடைநிலை கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழியை மட்டுமே கட்டாயமாகப் பயில வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது.
பாடத் திட்டத்தைப் பொறுத்தவரை, தமிழக அரசின் பாடத் திட்டத்தையே புதுச்சேரி அரசு சார்ந்துள்ளது. அதன்படி, புதுச்சேரி மாநிலப் பள்ளிகளில், 2006ல், முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது, மொழிப் பாடமாக, தமிழ் மொழியில் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.
இந்திய அரசு, பிரெஞ்ச் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், பிரெஞ்ச் மொழி கற்பதற்கு ஆவன செய்ய வேண்டும். மேலும், புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பணிபுரிவதால், பள்ளிகளில் இந்தி மொழி கற்பிப்பதும் அவசியமாகிறது.
இத்தகைய காரணங்களால், கட்டாயத் தமிழ் பயிலும் சட்டத்திலிருந்து, புதுச்சேரிக்கு விலக்கு அளிக்குமாறு, தமிழக அரசுக்கு, புதுச்சேரி அரசு வேண்டுகோள் வைத்தது. அதன்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளிகளில், இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், இம்மொழிப் பாடங்களில் தேர்வு நடத்தவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடந்த, குழந்தைகள் தின விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: கட்டாயத் தமிழ் பயிலும் சட்டத்தால், புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் மொழி தேர்வு மட்டுமே எழுத வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நன்றி தெரிவிப்பு: புதுச்சேரி அரசின் கோரிக்கையை ஏற்று, பள்ளிகளில் இந்தி மற்றும் பிரெஞ்ச் மொழி கற்பிக்கவும், தேர்வு நடத்தவும் தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதற்காக, தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment