ADSENSE HERE!
இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி (வயது 76) ஜூலை 25 அன்று
பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன் மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தார். 40 ஆண்டு காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். வரலாறு, அரசியல் அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டங்களும், சட்டத்தில் பட்டமும் பெற்று பத்திரிகையாளராக வாழ்க்கையை துவக்கியவர் பிரணாப்.அகிலேஷ் யாதவ்
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் அபார வெற்றி பெற்ற சமாஜ்வாதிக் கட்சி ஆட்சி அமைத்தது. அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் முதல்வர் பொறுப்பை ஏற்காமல் தனது மகன் அகிலேஷ் யாதவை முதல்வராக்கினார். அகிலேஷ் யாதவ் (வயது 39) ஆஸ்திரேலியாவில் சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
நரேந்திர மோடி
குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நரேந்திர மோடி நான்காவது முறையாக அம்மாநில முதல்வர் பதவியில் அமர்ந்தார். நடுத்தர வர்க்கத்தில் பிறந்த இவர், இளம் வயதிலிருந்தே அரசியலில் தீவிரம் காட்டினார். இவர் அரசியல் அறிவியல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
அர்விந்த் கெஜ்ரிவால்
அன்னா ஹசாரே குழுவில் இருந்த இவர், அக்குழுவிலிருந்து பிரிந்து வந்து ‘ஆம் ஆத்மி’ என்ற பெயரில் புதுக்கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்டோர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்தி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவல்களையும் வெளியிட்டவர் இவர்.
ராகுல் திராவிட்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மார்ச் 9-ஆம் தேதி அன்று ராகுல் திராவிட் (வயது 39) அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்பட்ட திராவிட் 1996-ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். 12 ஒரு நாள் சதத்தையும், 36 டெஸ்ட் சதத்தையும் எடுத்துள்ளார் ராகுல் திராவிட்.
சச்சின் தெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் சச்சின் தெண்டுல்கர் (வயது 39) சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டிசம்பர் 23 அன்று அறிவித்தார். இதுவரை மொத்தம் 463 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் சச்சின் 18,426 ரன்களைக் குவித்துள்ளார். இவற்றில் 49 சதங்களும், 96 அரை சதங்களும் அடங்கும். ஒரு நாள் போட்டிகளில் முதன் முதலில் இரட்டைச் சதம் அடித்த பெருமை இவரையே சேரும்.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவழி பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசாவில் பணியாற்றி வருகிறார். இவர் 7-வது முறையாக விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 44 மணி நேரத்தில், தொடர்ந்து 6 முறை நடைப்பயணம் செய்த விண்வெளி வீராங்கனை என்ற புதிய சாதனையை சுனிதா படைத்துள்ளார்.
சிறுமி மலாலா
பாகிஸ்தானில் பெண்கள் கல்வி கூடாது என்று தாலீபான் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை எதிர்த்து குரல் கொடுத்த மலாலா தீவிரவாதி ஒருவனால் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி சுடப்பட்டாள். உயிருக்குப் போராடிய மலாலாவை லண்டனுக்கு வரவழைத்து அந்நாட்டு அரசு சிகிச்சை அளித்து காப்பாற்றியது. துணிச்சல் மிக்க இச்சிறுமியை கௌரவிக்கும் விதத்தில் நவம்பர் 10-ம் தேதி ‘மலாலா தினம்’- ஆக கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
ADSENSE HERE!
No comments:
Post a Comment