Breaking News

டி.என்.ஏ வும் சில ஆச்சரியங்களும்

ADSENSE HERE!

எப்போதும் தன்னைப் பற்றியும், தனது முன்னேற்றத்தைப் பற்றியுமே சிந்தித்து வாழும் மனிதர்களை நாம் சுயநலவாதிகள் என்கிறோம்.
ஆனால், சுயநலவாதம் எனும் குணம் மனிதர்களில் மட்டுமல்ல, உயிரினங்களின் இயக்கத்துக்கு அடிப்படையான டி.என்.ஏ. மரபுப்பொருளுக்கும் உண்டு என்று ஆச்சரியமூட்டுகிறது ஒரு சமீபத்திய ஆய்வு!

டி.என்.ஏ. என்பது உயிர்களின் உடலியக்கத்துக்கு அவசியமான நெறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு வேதியியல் மூலக்கூறு. இவை, சிக்கலான பல்வேறு உயிரியல் நிகழ்வுகள் மூலம், உடலிலுள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களின் செயல்பாடுகளை வழிநடத்துகின்றன. நம் உயிரணுக்களில் இருவகையான டி.என்.ஏ.க்கள் உண்டு.

ஒன்று, உயிரணுக்களின் மையக் கட்டுப்பாட்டுப் பகுதியான நிïக்லியசில் இருக் கும் உயிரணு டி.என்.ஏ. மற்றொன்று, உயிரணுக்களின் செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும் மைட்டோ காண்ட்ரியா பகுதியில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. இந்த இரு வகையான டி.என்.ஏ.க்களுமே உயிரணு வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் இன்றியமையாதவைதான்.

வினோதமாக, உயிரணு வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத, ஆனால் ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு புதிய வகை டி.என்.ஏ. மைட்டோ காண்ட்ரியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டி.என்.ஏ.வுக்கு `சுயநலவாத டி.என்.ஏ.' என்று பெயரிடப்பட்டுள்ளது. சோதனைக்கூட ஆய்வுகளுக்கு பயன்படும் மாதிரி உயிரினமான சி.எலிகன்ஸ் எனப்படும் ஒரு புழுவின் மீதான ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

டி.என்.ஏ. தெரியும், அதென்ன சுயநலவாத டி.என்.ஏ.?

ஒரு உயிரணு வளரும்போது பொதுவாக அதன் மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ. உள்ளிட்ட மொத்த டி.என்.ஏ.வும் இரட்டிப்படைவதே இயல்பான உயிரியல் நிகழ்வு. ஆனால் இந்த ஆய்வில், உயிரணு வளர்ச்சியின் போது மைட்டோ காண்ட்ரியாவில் உள்ள டி.என்.ஏ.வின் ஒரு பகுதி மட்டும் தனியாகவும், வேகமாகவும் இரட்டிப்படைந்தது கண்டறியப்பட்டது. மேலதிக பரிசோதனைகளில், இந்த டி.என்.ஏ.வினால் உயிரணுவுக்கு எந்த பயனும் இல்லை என்பதும், மாறாக சில பாதிப்புகள் இருப்பதும் தெரியவந்தது. இதன் காரணமாகவே, இந்த டி.என்.ஏ.வுக்கு சுயநலவாத டி.என்.ஏ. என்று பெயரிடப்பட்டது என்கிறார் மூத்த ஆய்வாளர் டீடென்வர்.

இதற்கு முந்தைய ஆய்வுகளில், சில தாவரங்களில் இதே போன்ற சுயநலவாத டி.என்.ஏ. இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், அந்த தாவரங்களின் மலர்தல் தொடர்பான குறைபாடுகள் மற்றும் மலட்டுத்தன்மைக்கு, அவற்றின் சுயநலவாத டி.என்.ஏ. காரணமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை, சில தாவரங்களில் மட்டும் இருக்கிறது என்று கருதப்பட்ட சுயநலவாத டி.என்.ஏ., சி.எலிகன்ஸ் போன்ற விலங்குகளிலும் இருக்கிறது என்பது, ஓரிகான் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வின் மூலம் உலகில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாரசியமாக, சி.எலிகன்ஸ் புழுவில் சுயநலவாத வகை டி.என்.ஏ.க்கள் இருந்ததும், அவை ஆபத்தானவை என்பதும் முன்னரே தெரிந்திருந் தாலும், அவை சுயநலவாத டி.என்.ஏ.தான் என்பது தெரியாமல் இருந்தது என்கிறார் ஆய்வாளர் கேட்டீ கிளார்க். மேலும், சுயநலவாத டி.என்.ஏ.க்களை உடைய புழுக்கள் குறைவான சந்ததிகள் மற்றும் தசை செயல்பாடு கொண்டவையாய் இருந்தன. இந்த நிலை, இயற்கை தேர்வு எனும் பரிணாம செயல்பாடு இந்த புழுக்களில் சரியாக வேலை செய்யவில்லை என்பதையே காட்டுகிறது என்கிறார் கேட்டீ!

சுயநலவாத டி.என்.ஏ.க்கள், உயிரினங்களின் வாழ்தல் மற்றும் இனவிருத்திக்கு பயன்படவில்லை என்றால், பரிணாம செயல்பாட்டின் மூலம் அவை அழிந்தல்லவா போயிருக்க வேண்டும்? அவை இன்னும் அழியாமல் இருப்பது, இயற்கை தேர்வானது உயிர் அல்லது உயிரின அளவில் எப்போதுமே சரியாக செயல்படுவதில்லை என்பதற்கான ஒரு உதாரணமே. ஆக, `உயிரியல் முன்னேற்றமானது குறைபாடுகள் உடையதே' என்கிறார் முனைவர் டீ டென்வர்.

இவற்றைவிட இன்னும் சுவாரசியமான செய்தி என்னவென்றால், சுயநலவாத டி.என்.ஏ.வினால் சி.எலிகன்ஸ் புழுக்களில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது குறைபாடுகள், ஒரு மனிதன் மூப்படைவதால் அவனது உயிரணுக்களில் அதிகரிக்கும் கெட்டுப்போன மைட்டோ காண்ட்ரியாவினால் ஏற்படும் பாதிப்புகளைப் போலவே இருக்கிறது என்பதுதான். புழுக்களுக்கு வயதாக வயதாக, அவற்றின் சுயநலவாத டி.என்.ஏ.வின் அளவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, இந்த சுயநலவாத டி.என்.ஏ.க்கள் பற்றிய செய்தியால் நமக்கென்ன பயன்?

சுயநலவாத டி.என்.ஏ.க்கள் மீதான மேலதிக ஆய்வுகள் மூலம், மனிதர்களைப் பாதிக்கும் ஒருவித குறைபாடான `மைட்டோ காண்ட்ரியல் டிஸ்பங்ஷன்' குறித்த புரிதலை பெற முடியும் என்கிறார் முனைவர் டென்வர். இந்த ஆய்வின் மூலம், சுயநலவாதமானது மனித அளவில் இருந்தாலும் சரி, உயிரணு அளவில் இருந்தாலும் சரி, ஆபத்தானதே என்பது நிரூபணமாகிறது.
ADSENSE HERE!

No comments:

Post a Comment