ADSENSE HERE!
இந்திய கிரிக்கெட் அணியின் மீதான கடும் விமர்சனங்கள் அனைத்தையும் தகர்த்து எறிந்திருக்கிறது டெல்லி டெஸ்ட் போட்டியின் வெற்றி! 4-0 என்ற கணக்கில் தொடரை வென்றதுடன் வரலாறு பேசக் கூடிய சாதனைகளையும் இந்திய கிரிக்கெட் அணி சாதித்திருக்கிறது.
கேப்டன் டோணி தலைமையிலான இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டது. அப்போது 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா மண்ணில் தோல்வியைத் தழுவியது. இதன் பின்னர் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.
பின்னர் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்திலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார சாதனை நிகழ்த்தியுள்ளது. கடைசிப் போட்டியான டெல்லி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது மூலம் பல வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.
ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் : டெல்லி டெஸ்டில் நேற்று ஒரே நாளில் 16 விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேலும் 3வது நாளிலேயே போட்டியின் முடிவும் கிடைத்து விட்டது.
2-வது முறை : ஆஸ்திரேலியாவை 3 நாட்களுக்குள் இந்தியா தோற்கடித்து இருப்பது இது 2-வது முறையாகும். கடந்த 2004-ம் ஆண்டு மும்பை டெஸ்ட் போட்டியில் இதேபோல் சீக்கிரம் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.
கேப்டன் டோணியின் அதிக வெற்றி : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக வெற்றிகளை குவித்த ஒட்டுமொத்த கேப்டன்களின் பட்டியலில் இந்திய கேப்டன் டோணி 3-வது இடத்தில் இருக்கிறார். மேற்கிந்திய தீவுகள் அணி 12 முறையும் இங்கிலாந்தின் மைக் பிரியர்லி 11 முறையும் வென்றுள்ளனர். கேப்டன் டோணி, இங்கிலாந்தின் டபிள்யூ.ஜி.கிரேஸ் ஆகியோர் தலா 8 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர்.
4 போட்டியிலும் டாஸ் ஜெயித்த ஆஸி. : தற்போது முடிவடைந்த தொடரில் 4 டெஸ்ட் போட்டிகளிலுமே ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது. 136 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் ஒரு தொடரில் ஒரே அணியே 4 மற்றும் அதற்கு மேல் டாஸில் வெற்றி பெற்றிருப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1978-79-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போது ஆஸ்திரேலிய அணி 6 போட்டிகளில் 5-ல் டாஸ் வென்றது. ஆனால் அந்த தொடரிலும் 1-5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தோற்று போய் இருந்தது.
இந்தியாவில் 7-வது தோல்வி : இந்தியாவில் ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக தழுவிய 7-வது தோல்வி (2008-ல் ஒன்று, 2010-ல் இரண்டு, 2013-ல் 4) இதுவாகும். இந்திய மண்ணில் தொடர்ந்து அதிக தோல்வியை சந்தித்த வெளிநாட்டு அணி ஆஸ்திரேலியா தான். ஆஸ்திரேலியா இதற்கு முன்பு 1967-1994-ம் ஆண்டு காலத்தில் தென்ஆப்பிரிக்காவில் தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் தோற்றது அவர்களின் மோசமான பயணம்.
ADSENSE HERE!
No comments:
Post a Comment