Breaking News

திறமையான சினிமாட்டோகிராபர் ஆவது எப்படி?

ADSENSE HERE!

காட்சியமைப்பு சிந்தனை, நல்ல நுட்பம், நெருக்கடியான தருணத்தில் நிதானம் இழக்காமல்
இருத்தல், பிரச்சினைத் தீர்க்கும் திறன் போன்ற குணங்கள், ஒரு சினிமாட்டோகிராபர் அல்லது போட்டோகிராபி இயக்குநருக்கான தகுதிகள்.

ஆரம்ப நாட்களில், இந்த போட்டோகிராபி தொழில்துறையானது, ஒரு நபர் பணியாக இருந்தது. போட்டோகிராபி டைரக்டர், அந்தப் படத்தின் டைரக்டராகவும் இருப்பார். ஆனால், இன்றைக்கு, போட்டோகிராபி டைரக்டர் அல்லது சினிமாட்டோகிராபர்(cinematographer) என்பவரின் பணி, மிகவும் நிபுணத்துவம் மற்றும் சிறப்புத்தன்மை வாய்ந்ததாக பரிணாமம் அடைந்துள்ளது. ஒரு நல்ல போட்டோகிராபி இயக்குநர், ஒரு படத்திற்கான சிறந்த சொத்தாக மதிக்கப்படுகிறார். படத்தில் பார்க்கும் அனைத்து விஷயங்களையும் அழகாக காட்டும் பெரும் பொறுப்பு அவருடையது.

ஒரு சினிமாட்டோகிராபராக ஆவதற்கு, டெக்னிக்கை விட, கலைநயம் அதிகம் தேவை என்றாலும், அதிகளவிலான டெக்னிக்குகளையும் உள்வாங்க வேண்டியுள்ளது மற்றும் அதிகமான விஷயங்களை கற்று தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

கலைநயத்தைக் கற்றல்

ஒரு நல்ல சினிமாட்டோகிராபராக நீங்கள் உருவாக, படிப்பை விட, உங்களின் ஆசிரியரே, முக்கிய தூண்டுகோலாக இருப்பார். சினிமாட்டோகிராபி தொடர்பான சிறப்பு படிப்பில் சேர, ஒருவர், திரைப்படக் கல்லூரியில் சேர வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை, இப்படிப்பு, 2 முதல் 3 வருட டிப்ளமோ படிப்பாக வழங்கப்படுகிறது.

புனேவிலுள்ள, பிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட், கொல்கத்தாவிலுள்ள சத்யஜித்ரே பிலிம் அன்ட் டெலிவிஷன் இன்ஸ்டிட்யூட் போன்றவை புகழ்பெற்ற திரைப்பட கல்லூரிகள். இங்கே வழங்கப்படும், முதுநிலை டிப்ளமோ படிப்பு புகழ்பெற்றது. இவைத்தவிர, விஸ்லிங் உட்ஸ்(Whistling Woods) போன்ற திரைப்பட கல்வி நிறுவனங்களில், பள்ளிப் படிப்பை முடித்தப்பிறகு, 2 வருட படிப்பை மேற்கொள்ளலாம்.

நீங்கள் யாராக இருக்க வேண்டும்?

திரைப்படக் கல்லூரிகளில், பயிற்சி என்பது, தியரி மற்றும் பிராக்டிஸ் ஆகியவை சேர்ந்ததாக இருக்கும். ஒருவர், போட்டோகிராபி இயக்குநராக அல்லது சினிமாட்டோகிராபராக பயிற்சி எடுக்கிறார் எனில், அவர் முதலில் அதுவாகவே இருக்க வேண்டும். அப்போதுதான், வெற்றிகரமாக கற்றுக்கொள்ள முடியும். கல்லூரிக்கு வெளியே, நீங்கள் தனியாக பல ப்ராஜெக்ட்களை செய்ய வேண்டியிருக்கும். படிப்பானது, கேமாராக்களை வைத்து, செயல்முறை கற்றல் மூலம் வழங்கப்படுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான அனுபவமாக இருக்கும்.

பாடத்திட்ட அமைப்பு

முதல் வருட படிப்பானது, பொது அடிப்படை படிப்பாக இருக்கும். டைரக்ஷன், எடிட்டிங், ஒலி, ப்ரொடக்ஷன், கேமரா, ஆர்ட் டிசைன் உள்ளிட்ட, சினிமா தொடர்பான அனைத்து அடிப்படை அம்சங்களும் கற்றுத்தரப்படும். முதலாமாண்டு மாணவர்களுக்கு, ஒரு நாளின் முதல் பாதி, தியரி பாடங்களுக்கு ஒதுக்கப்படும். மீதி பாதி நாள், அனைத்து பாடங்களின் பிராக்டிகல் பயிற்சிக்காக ஒதுக்கப்படும். மாலைப் பொழுதானது, படத்தை திரையிடுதலோடு முடியும். உலகின் அனைத்து வகையான சினிமாக்களையும் மாணவர்கள் பார்த்து ரசிப்பார்கள். உண்மையிலேயே, இது ஒரு சிறந்த அனுபவம்.

இரண்டாம் ஆண்டு படிப்பில், நடைமுறை பயிற்சிக்கே, மிக அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படும். எனவே, நீங்கள் அதிகநேரம் ஸ்டூடியோவில் செலவிட வேண்டியிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஸ்டூடியோ நேரம் ஒதுக்கப்பட்டு, சக மாணவர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். ஒரு பயிற்சியில், ஒரு சீனியர் மாணவர், போட்டோகிராபி இயக்குநராக இருந்தால், அவரது சக மாணவர்கள் அல்லது ஜுனியர்கள், அவருக்கு உதவியாளர்களாக இருப்பார்கள்.

இறுதியாண்டு முடிவில், ஒரு மாணவர், 6 படங்கள் வரை தயாரித்திருப்பார். அதில், குறும்படங்கள், மியூசிக் வீடியோ மற்றும் டாகுமெண்டரி, இறுதி அரைமணிநேர டிப்ளமோ படம் போன்றவை அடங்கும். படிப்பு முடிகையில், ஒரு மாணவர், முழுதகுதி பெற்ற ஒரு போட்டோகிராபி இயக்குநராக இருப்பார். ஒருவரின் விடாமுயற்சியுடன் கூடிய கடின உழைப்பே, இந்த நிலையை அடைய உதவும்.

பயிற்சியின் தன்மை

பயிற்சியின்போது, மாணவர்கள், குழுவாக பயிற்சிபெற வைக்கப்படுகிறார்கள். குழுவாக பணியாற்றும் ஒருவர் சிறந்த அனுபவத்தைப் பெறுகிறார். இதுபோன்ற பயிற்சியில், ஒருவரின் சுய சாதனையைவிட, ஒரு குழுவின் சாதனையே பெரிதாக தோன்றும். ஒவ்வொருவரின் தனித்திறமையையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அதன்மூலமாக, சக மனிதர்களின் மகத்துவமும் தெரியவரும்.

கருத்தை மேம்படுத்தல்

ஒரு கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் மனப்பாங்கு, திரைப்படக் கல்லூரிகளில் வளர்த்தெடுக்கப்படுகிறது. உங்களுக்கும், உங்களது ஆசிரியருக்கும், சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனிமனிதன் என்ற முறையில், உங்களின் சுதந்திரத்திற்கு மதிப்பு உண்டு.

வகுப்பறைக்கு வெளியே...

திரைப்படக் கல்லூரி படிப்பில், வகுப்பறையின் பணி என்பது, சிறிதளவேயாகும். உங்களின் உள்ளார்ந்த ஆர்வமும், திரைப்படங்களை தேடித்தேடி பார்ப்பதும், விமர்சிப்பதும், விவாதிப்பதும், பல்வேறான அம்சங்களை ஆராய்வதும், கலையோடு சேர்த்து, தொழில்நுட்ப அம்சங்களையும் தெரிந்து கொள்வதும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளன.

திரைப்படம் பற்றி சக மாணவர்களுடன் விவாதம் செய்வது, உங்களின் கலையுலக அறிவை கூர்மையடைய செய்யும். ஏனெனில், பலவிதமான பின்னணிகள் மற்றும் ரசனைகளைக் கொண்ட மாணவர்கள் இருப்பார்கள். எந்த மாதிரியான சினிமாவுக்கு, அவர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்று கவனிக்க வேண்டும். ஒருவரின் உள்ளார்ந்த திறன், பிறருடன் விவாதிக்கும்போது சிறப்படையும் என்பதை மறக்கக்கூடாது.

திரைப்படக் கல்லூரிகளுக்கு அப்பால்...

போட்டோகிராபி துறையில் பயிற்சிபெற, திரைப்படக் கல்லூரிதான் ஒரே இடம் என்பதல்ல. மீடியா தொடர்பான விரிவான அம்சங்களைக் கொண்ட மாஸ் கம்யூனிகேஷன் படிப்புகளும், சிறந்த போட்டோகிராபி இயக்குநர்களை உருவாக்கும்.

மாஸ் கம்யூனிகேஷன் படிப்பு, கேமரா அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இதன்மூலம், செய்தி அல்லது டாகுமென்டரி கேமரா நிபுணராக பரிணமிக்கும் பயிற்சி உங்களுக்கு கிடைக்கிறது. கேமரா குறித்த சிறப்பம்சங்கள், மாஸ் கம்யூனிகேஷன் படிப்பில் இல்லையென்றாலும், பல வெற்றிகரமான போட்டோகிராபி இயக்குநர்களை அப்படிப்பு உருவாக்கியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

திரைப்படக் கல்லூரிகளில் பட்டம்பெற்ற சிறந்த நபர்களை ஆசிரியர்களாகக் கொண்டு, பல சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தப் படிப்புகளில், திரைப்படக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் பாடத்திட்டங்களின் சிறியளவு மாடல்கள் பின்பற்றப்படுகின்றன. எனவே, ஒருவர் சிறப்பான கல்வியைப் பெறும் வாய்ப்புகள் உண்டு. அதேசமயம், எந்தளவு நல்ல ஆசிரியர்கள் அமைகிறார்களோ, அந்தளவுதான் உங்களின் கற்றல் அமையும். எனவே, நல்ல ஆசிரியர் என்பவர் மிகவும் முக்கியம். எனவே, இப்படிப்பிற்கென, ஏதேனும் கல்வி நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக, அங்கே படிக்கும் அல்லது படித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கலந்துரையாடி, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

பணியில் கற்றுக்கொள்ளுதல்

போட்டோகிராபி தொழில் என்பது, பல சிறந்த அனுபவங்களைக் கொடுக்கும் ஒரு தளமாகும். நீங்கள், ஒரு திரைப்படக் கல்லூரியில் படித்து முடித்து வெளிவந்தவுடன், தனியான முறையில் பணியாற்ற வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். சில தடவைகளுக்கு, பிறரின் உதவி தேவைப்படும். நீங்கள் ஒரு சிறந்த, புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தில் படித்தவராக இருந்தால், அங்கேயே உங்களுக்கு குழுப் பணியின் அனுபவம் கிடைத்திருக்கும். அந்த அனுபவம், உங்களது தொழிலிலும் உதவிகரமாக இருக்கும்.

உதவியாளர் பணி

கல்வி நிறுவனத்தில் ஷ¤ட்டிங் நடைபெறுகையில், உங்களின் பணி, நெருக்கடியின்றி இருக்கும். சில குழுக்கள், ஒரு ராணுவ கட்டுக்கோப்புடன் இயங்கும். எனவே, சில காலம் கழிந்த பிறகுதான், உங்களுக்கு உதவியாளர் தொடர்பான பயிற்சி கிடைக்கும். ஒரு அம்சத்தை இப்படித்தான் காட்சிப்படுத்த வேண்டும் என்பதை தெளிவாக முடிவுசெய்து, அதன்படியே செயலை மேற்கொள்வதில், உதவியாளர்களின் பங்கு மற்றும் அவர்களை வழிநடத்தும் திறன் போன்றவை முக்கியமானவை.

பணி வாய்ப்புகள்

திரைப்படக் கல்லூரிகளில், ஓரியன்டேஷன் என்பது, பிரதான அளவில், பிக்ஷனாக இருந்தாலும், அதில் படித்து வெளிவரும் பல சினிமாட்டோகிராபர்கள், டாகுமெண்டரிகளில் பணிபுரிந்து, திருப்தியான பணி அனுபவம் மற்றும் சம்பளத்தைப் பெறுகிறார்கள். பிக்ஷனில் பணியைத் தேடும் ஒருவர், சில டாகுமென்டரிகளை எடுக்கிறார். இந்த அனுபவம் மதிப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த வகையில், ஒருவர், அதிக பணம் சம்பாதிக்கலாம்.

படித்து முடித்ததும், விரைவாக பணம் சம்பாதிக்கும் நபர்களில், சினிமாட்டோகிராபர்கள் முக்கியமானவர்கள். புகழ்பெற்ற சினிமாட்டோகிராபர்கள், ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நிகராக மதிக்கப்படுகிறார்கள். ஆனால், இத்துறையில் வெற்றியடைய கடின முயற்சியும், ஆரம்பகால சிக்கல்களை சமாளிக்கும் திறனும் தேவை. அதை முடித்துவிட்டால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கும்.
ADSENSE HERE!

No comments:

Post a Comment